தெலுங்கில் ‘கார்த்திகேயா, பிரேமம், சவ்யசாச்சி, பிளடி மேரி, கார்த்திகேயா 2’ போன்ற படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி, தற்போது ‘தண்டேல்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கில் உருவான இந்த படம், பிப்ரவரி 7ஆம் தேதி தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சந்து மொன்டேட்டி சமீபத்திய பேட்டியில், அடுத்து நடிகர் சூர்யாவை முன்னணி கதாநாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ‘தண்டேல்’ படத்தின் கதையை தயாரிப்பாளர் அல்லு அரவிந்திடம் கூறிய போது, அவர் சூர்யா அல்லது ராம் சரணை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க வாய்ப்பு தருவதாக சொல்லியுள்ளார். மேலும், அந்தப் படத்திற்காக 300 கோடி வரை முதலீடு செய்யத் தயாராக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சூர்யா தற்போது தனது 45வது படத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார். மேலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.