பிரபல இந்தி இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், மலையாள மொழியில் உருவான ரைஃபில் கிளப் என்ற திரைப்படத்திலும் அவர் நடித்தார்.இவ்விரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடித்துவரும் அனுராக் காஷ்யப் மும்பையில் வசித்து வருகிறார். இவர் இந்தாண்டு தென்னிந்தியாவுக்கு குடியேற போவதாக கடந்த மாதத்தில் தெரிவித்திருந்தார்.
தற்போது வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இதில் அனுராக் காஷ்யப் இயக்குனராக பணியாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என்று படக்குழு ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளது. இதனை நடிகை டாப்ஸி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமானவை. இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் இத்திரைப்படத்தில் என்ன மாதிரியான புதுமையான கதைக்களத்தை உருவாக்கியிருக்கின்றனர் என்பதில் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.