தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் இருக்கிறார். “செல்லமே” திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், “சண்டக்கோழி”, “தாமிரபரணி” உள்ளிட்ட பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் செயல்படும் விஷால், படு ஆக்டிவாக செயல்படுபவர்.
சமீபத்தில் விஷால் நடித்து வெளியான “மதகஜராஜா” திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது, நடிகர் விஷாலுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மேடையில் தோன்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையிலேயே யூடியூபர் சேகுவாரா என்பவர், “நடிகர் விஷால் மதுபழக்கத்திற்கு அடிமையானதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது, மேலும் கைகால் நடுக்கம் ஏற்பட்டது” என்று யூடியூப் சேனல்களில் பேட்டியளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், யூடியூபர் சேகுவாரா மற்றும் அந்த பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல்களிடம் நடவடிக்கை எடுக்க, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் புகார் அளித்தார். நடிகர் நாசர் அளித்த புகாரின் அடிப்படையில், யூடியூபர் சேகுவாராவைத் தவிர, 2 யூடியூப் சேனல்கள் மீதும் தேனாம்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், கடந்த 12-ம் தேதி வெளியான “மதகஜராஜா” படத்தின் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசியபோது, அவரது கை நடுங்கியது. இதன் பின்னர், சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.