மும்பையில் பாலிவுட் பிரபலமான நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நள்ளிரவில் ஒரு கொள்ளையன் புகுந்து, அவரை ஆறு முறை கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரது நிலைமை மிக மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் போது சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சைப் அலிகானின் மனைவியும் பிரபல நடிகையுமான கரீனா கபூர் வெளியிட்ட அறிக்கையில், “அன்றைய நாள் எங்கள் குடும்பத்துக்கு மிகவும் சவாலாக இருந்தது. நடந்த இந்த சம்பவத்தை எங்கள் மனம் ஏற்க முடியாமல் உள்ளது. இந்தக் கடின சூழலில் யாரும் யூகங்கள் செய்வதை தவிர்க்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் பரவுவதால் அது எங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும். இந்த சூழ்நிலையை சமாளிக்க எங்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்று கூறியுள்ளார்.