இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான படங்களில் முன்னதாகவே பலரது கவனத்தை ஈர்த்த படமாக மத கஜ ராஜா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷால், சந்தானம், வரலஷ்மி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைப்பில் உருவான இப்படம், 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் பல காரணங்களால் ரிலீஸ் தாமதமானது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டின் பொங்கல் திருவிழாவிற்கு இப்படம் வெளியிடப்பட்டது.
படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, சந்தானத்தின் காமெடி நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 15 கோடி மட்டுமே என்று கூறப்படுகின்றது. ஆனால், படம் இப்போது பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 20 கோடிகளை தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே, மத கஜ ராஜா படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், விடுமுறை நாட்கள் இன்னும் உள்ளதால் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படம் பார்த்த பலரும், சந்தானம் மீண்டும் காமெடியனாக திரையுலகில் வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழலில், சந்தானம் முன்பு அளித்த பேட்டியொன்றின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், “நான் கதாநாயகனாக மாறிய பிறகு, சிம்பு என்னிடம், ‘நீ ஏன் இப்படியொரு முடிவை எடுத்தாய்? எங்களுடன் அவ்வப்போது ஒரு படத்தில் நடித்து வந்திருக்கலாம்’ என்று கூறினார். அதற்கு நான் உடனே ‘எந்த பிரச்சனையும் இல்லை; இப்போதும் காமெடியனாக நடிக்கத் தயார்’ என்று சொன்னேன்,” என சந்தானம் தெரிவித்துள்ளார். இதுபற்றி இணையத்தில் பரவி வரும் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.