ஷென் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் புகழ் மற்றும் ஈடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தருணம்’. இந்தப் படத்தை ‘தேஜாவு’ திரைப்படத்தை இயக்கிய அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கியுள்ளார். கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
திரைப்படத்தின் அறிமுக விழாவில் இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் பேசியதாவது: “இந்தப் படத்தின் நாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நான் வற்புறுத்தினேன். எனது முதல் படத்தின் வேலைகளை முடித்த பிறகு கிஷன் தாஸ் நடித்த படத்தை பார்த்தேன். அவருடைய நடிப்பு மிகச் சிறந்ததாக இருந்தது. இந்த கதாபாத்திரத்துக்கு அவர் மிகவும் பொருத்தமானவர் என்று நான் எண்ணினேன். அவரிடம் கதை சொல்ல, அவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
மேலும், இந்தப் படத்தை புதுமுகங்களின் மூலம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஸ்மிருதி வெங்கட் என்னுடைய ‘தேஜாவு’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது அவரிடம் நான் கூறியிருந்தேன், ‘உங்களுடைய நடிப்பு நன்றாக உள்ளது. நீங்கள் ஒரு நல்ல படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும்,’ என்றேன். அவர் எனது வார்த்தைகளை நம்பவில்லை.
இந்தப் படம் தொடங்கிய போது, ஸ்மிருதிதான் சரியாக இருப்பார் என்று நான் கூறினேன். பிறர் தயங்கினாலும், ‘இந்த கதாபாத்திரத்தை இதுவரை செய்திராத ஒருவர் செய்ய வேண்டும்’ என்று உறுதியாகக் கூறினேன். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது, அதனால் இந்த படத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளார். வாழ்க்கையில் பல தருணங்கள் இருக்கும். ஆனால் ஒரு தருணம் மட்டும் வாழ்க்கையை முழுவதும் மாற்றி விடும். இப்படியான ஒரு உண்மையான தருணத்தை காதலுடன் கலந்துகொண்டு இந்தப் படம் சொல்லி இருக்கிறது,” என்றார்.