தமிழ் திரையுலகில் கடந்த ஆண்டு வெளியான மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக “லப்பர் பந்து” விளங்குகிறது. இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியிலும் மிகுந்த சாதனை அடைந்தது.
லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் அனைவரின் நடிப்பும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக, அட்டக்கத்தி தினேஷ் பூமாலை (கெத்து தினேஷ்) என்ற கதாபாத்திரத்தில் தன் திறமையைக் காட்டி நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இந்நிலையில், பிரபல இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், அட்டக்கத்தி தினேஷின் நடிப்பை மிகவும் பாராட்டியதோடு, அவருடன் ஒருமுறை இணைந்து வேலை செய்யவேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படியான நடிப்பை நான் இதுவரை எவரிடத்திலும் காணவில்லை. எந்த சாயலும் இல்லாத, இயல்பான முறையில் அவர் நடித்துள்ளார். அது நடிப்பாகவே தெரியவில்லை. எப்படி அவர் இதை செய்தார் என்பது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அவர் தூக்கி வைத்து கொண்டாடப்பட வேண்டியவர். தினேஷுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அவருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆவல் எனக்குள் உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.