எம்.ஆர்.மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரித்துள்ள படம் ‘யோலோ’. இப்படத்தை அமீர் மற்றும் சமுத்திரக்கனியுடன் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்ட சாம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் தேவ், தேவிகா, ஆகாஷ், படவா கோபி, நிக்கி மற்றும் சுபாஷினி கண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு சூரஜ் நல்லுசாமி கவனித்துள்ளார். இசையை சகிஷ்னா சேவியர் அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் சாம் கூறியதாவது: “இது முழு ரொமான்டிக் கதையாடல் கொண்ட படம். அதே நேரத்தில், காமெடிக்கான முக்கியத்துவமும் உள்ளது. இன்றைய காலத்தில் அதிகமாக வெளிவரும் ரத்தப்பதிவை மையமாகக் கொண்ட படங்களை ஒப்பிடும்போது, இந்த படம் ரசிகர்களுக்கு மாற்றமாக இருக்கும். இரண்டு பேர் வாழ முடியாத ஒரு வாழ்க்கையை மற்றொரு இரண்டு பேர் எப்படி வாழ்கிறார்கள் என்பதே இப்படத்தின் மையக்கரு.
அந்த இரண்டு பேர் யார் என்பதை கதை முன்னேறும் போது அறிய முடியும். அவர்கள் ஆவியா அல்லது அமானுஷ்ய சக்திகளா என்பது சஸ்பென்ஸாக இருக்கும். இதற்குள் பேன்டஸி கலந்த சிறப்பு அம்சமும் உள்ளது. காதல், காமெடி மற்றும் பேன்டஸி மையமாக உருவாகியிருக்கும் இப்படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தயாராகி வருகிறது.