லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளியான ‘இந்தியன் 2’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதன் தொடர்ச்சியாக ‘இந்தியன் 3’ படமும் தயாராகி, இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், ‘இந்தியன் 3’ படத்தின் வேலைகளை இயக்குநர் ஷங்கர் இன்னும் முடிக்கவில்லை. இதற்கிடையில், அவர் தெலுங்கு படம் ‘கேம் சேஞ்சர்’ இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டு வந்துள்ளார்.
‘கேம் சேஞ்சர்’ படம் 2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால், ‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் நிறைவடையாத நிலையில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்த் திரைப்பட சங்கங்களிடம் லைகா நிறுவனம் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்த விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில், கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் உள்ளார். அவர் திரும்பி வந்த பிறகு ‘இந்தியன் 3’ தொடர்பான முடிவுகள் மற்றும் விவாதங்கள் நடைபெறும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டதால், ‘கேம் சேஞ்சர்’ படத்தை தமிழ்நாட்டில் வெளியிட லைகா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் இதனால் கேம் சேன்ஜர் சொன்னபடி 10ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.