ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள அவரது 25வது படத்திற்கு கிங்ஸ்டன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகியவை கமல் பிரகாஷ் அவர்களால் செய்யப்பட்டுள்ளன. இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பேச்சுலர் படத்திற்கு பிறகு இவ்விருவரும் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 10ஆம் தேதி சென்னையில் நடிகர் கமல்ஹாசன் அவர்களால் தொடங்கப்பட்டது. கடல் பின்னணியில் அமைந்த திகில் மற்றும் சாகசம் நிறைந்த திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில், கடலில் உள்ள மர்மங்களை கண்டறியும் மீனவரின் கதாபாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். இதனால் இப்படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், கிங்ஸ்டன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், படத்தின் டீசர் வருகிற 9ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட பதிவில், “கிங்ஸ்டன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டதில் மகிழ்ச்சி. அன்புள்ள ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வெற்றியடைய வாழ்த்துகள். இந்த திரைப்படத்தை பெரிய திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.