பிரைன் டச் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில் ஆர்.முருகானந்த் உருவாக்கும் ‘பூர்வீகம்’ படத்தை கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதிர், மியாஶ்ரீ, போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, சூசன், ஶ்ரீ ரஞ்சனி, ஷாஸ்னா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய்மோகன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், சாணக்யா இசையமைத்துள்ளார்.
இயக்குனர் கிருஷ்ணன் இப்படம் குறித்து கூறியதாவது: “விவசாயம் என்பது நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால், இரண்டு தலைமுறையாக இளைஞர்கள் தங்களின் பூர்வீகத்தை விட்டு, படிப்பு மற்றும் தொழில் காரணமாக நகரங்களுக்கு இடம்பெயர்ந்து, அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். இளைஞர்கள் நகரத்திற்கு இடம்பெயர்வதால், நமது கலாசாரம், வாழ்வியல் முறை மற்றும் விவசாயத்தின் மேன்மை அனைத்தும் தேய்ந்து போகின்றன. விவசாயத்தின் முக்கியத்துவத்தை பற்றி நிதானமாகவும் அழுத்தமாகவும் பேசும் படைப்பாக ‘பூர்வீகம்’ உருவாகியுள்ளது.
உலகம் முழுவதும் விவசாய நிலங்கள் குறைந்து கொண்டிருக்கின்றன, ஆனால் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், எதிர்காலத்தில் உணவுப் பஞ்சம் ஒரு பெரிய பிரச்சனையாக மாறும். இதை தடுப்பதற்காக, தனிமனிதராகவோ அல்லது அரசாங்கமாகவோ விவசாய நிலங்களை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். மேலும், படித்தவராகவோ, பாமரராகவோ, அரசராகவோ, ஆண்டியாகவோ, யாராக இருந்தாலும், வாரத்தில் ஒருநாளாவது விவசாயத்தில் ஈடுபட வேண்டும். ஒவ்வொருவரும் விவசாயத்தில் ஈடுபட்டால் நம் நாடு வளமாகும், மக்கள் வாழ்வும் சிறக்கும். இப்படத்தின் மூலம் இதை ஆழமாக எடுத்துரைத்துள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.