கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய சந்தானம், இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். விஜய், அஜித், சூர்யா, ரஜினி, உதயநிதி, ஆர்யா, ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை வேடங்களில் அவர் நடித்துள்ளார். பின்னர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார்.
சந்தானத்தின் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரேம் ஆனந்த் இயக்கிய இத்திரைப்படத்தில் சுரபி, மசூம் ஷங்கர், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படம் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
இப்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரேம் குமாரே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இப்படத்தை நடிகர் ஆர்யா தயாரிக்கிறார். மேலும், அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில், நிழல்கள் ரவி, லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடிக்க உள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில முக்கிய சண்டைக் காட்சிகள் கப்பலில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் என்றும், படத்தின் டைட்டில் டீசர் பொங்கல் தினத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.