தமிழில் ‘ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில்’, ஹிந்தியில் ‘ஜவான்’ ஆகிய படங்களை இயக்கிய அட்லி, தற்போது ‘பேபி ஜான்’ எனும் படத்தை தயாரித்துள்ளார். தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான இப்படம் டிசம்பர் 25ல் வெளியாகிறது. இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்து அட்லி கூறியதாவது, “எனது ஆறாவது படத்துக்கு அதிக நேரமும் ஆற்றலும் தேவைப்படுகிறது. கதை எழுதி முடித்து விட்டோம். கடவுளின் ஆசீர்வாதத்துடன் விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என்றார்.
நடிகர்கள் தொடர்பான தகவல்களுக்கு இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்தப் படம் பெரிய அளவில் உங்கள் கண்களைத் திறந்து வைக்கும் ஒரு அனுபவமாக இருக்கும். நீங்கள் முன்பே பல விஷயங்களை ஊகித்து இருக்கலாம், ஆனாலும் இது மிகப்பெரிய ஆச்சரியங்களை தரும். நாட்டுக்கு பெருமை சேர்க்கும் படமாக இது இருக்கும்.
இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு துவங்குகிறது. எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். மிகச்சிறந்த அறிவிப்புகள் உங்கள் கவனத்திற்காக தயாராக உள்ளன” என்று கூறினார். அட்லி இயக்கவுள்ள புதிய படத்தில் சல்மான் கான், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் முன்கூட்டியே வெளியானது குறிப்பிடத்தக்கது.