கன்னட திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக பிரபலமானவர் உபேந்திரா. அதிரடி கருத்துக்களைக் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் விஷால் நடித்த சத்யம் என்ற ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் பாலிவுட் நடிகர் அமீர்கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
இதே நேரத்தில் உபேந்திரா தானே இயக்கி நடித்துள்ள யூஐ (UI) எனும் திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசரை பார்த்த அமீர்கான் ஆச்சரியப்பட்டு, கூலி படப்பிடிப்பின் போது உபேந்திராவை தன்னுடைய கேரவனுக்கு அழைத்து டீசரைப் பற்றி பாராட்டியதோடு, தானே ஒரு வீடியோ எடுத்து, உபேந்திராவுக்கு கொடுத்து, அதை பயன்படுத்திக் கொள்ளச் சொல்லியுள்ளார். மேலும், மறுநாள் உபேந்திராவுக்கு அழைத்து, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்தீர்களா எனக் கேட்டுள்ளார்.
“ஒரு பெரிய நடிகர் என்னைப் போன்ற ஜூனியர் நடிகருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். மேலும், நான் கேட்காமலேயே என் படத்தை புரமோட் செய்ய முனைந்தது என் மனதை மிகவும் நெகிழச்செய்தது. இவர்களைப் போன்ற பிரபலங்களிடம் இருந்து பல நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது” என உபேந்திரா நெகிழ்ந்து கூறியுள்ளார்.