தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ்குமார், கதாநாயகனாக நடிக்கவும் இசையமைக்கும் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் அவரது இசையமைப்பில் வெளிவந்த ‛அமரன்’ திரைப்படம் ரூ.300 கோடிக்கும் மேலான வசூலைச் செய்தது. மேலும், ‛லக்கி பாஸ்கர்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியது. தொடர்ந்து பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.
ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சி, ‘செலிபிரேஷன் ஆப் லைப்’ என்ற தலைப்பில், வரும் டிசம்பர் 7ம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அவரது முன்னாள் மனைவியும் பாடகியுமான சைந்தவியும் கலந்து கொண்டு பாடவுள்ளார். இதனை சைந்தவி தன் வீடியோ அறிவிப்பில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஜிவி குறித்து ‘ஜிவி பிரகாஷ் சார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காதலித்து திருமணம் செய்து கொண்டு, ஒரு பெண் குழந்தையை பெற்ற பின் இருவரும் பிரிவதாக கடந்த மே மாதம் அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும், பிரிவுக்குப் பின்னரும் எந்த வித சிக்கலுமின்றி ஒரே இசை நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொள்ளும் அளவுக்கு அவர்களிடையே நல்ல புரிதல் உள்ளதை இது காட்டுகிறது.இந்த நிகழ்வை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், ஜிவி பிரகாஷின் இசையில் சினிமாவிலும் சைந்தவி தொடர்ந்து பாடுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.