ஹாலிவுட்டில் ஆக்சன் படங்களின் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது ‘மிஷன்: இம்பாஸிபிள்’ சீரிஸ். இந்த படங்களில் டாம் குரூஸின் நடிப்பும் ஸ்டண்ட் காட்சிகளும் ரசிகர்களை மெய்சிலிர்க்க செய்துள்ளன. ஹாலிவுட்டில் அதிக வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்துள்ளன.
சீக்ரெட் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் டாம் குரூஸ் முதன்முதலாக நடித்த ‘மிஷன்: இம்பாஸிபிள்’ படம் 1996ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக ஏழு பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியான ஏழாம் பாகம் ‘ஏஐ தொழில்நுட்பம்’ மையமாக அமைந்திருந்தது. இந்தப் பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி, முன்னதாகவும் சில பாகங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, முந்தைய பாகத்தில் மலையில் இருந்து டாம் குரூஸ் எந்த வித டூப் இல்லாமல் குதித்த காட்சி இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், ‘மிஷன்: இம்பாஸிபிள்’ 8ஆம் பாகத்திற்கான டிரெய்லரை படக்குழுவும், நாயகன் டாம் குரூஸும் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாகம் அடுத்த ஆண்டு மே 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிரெய்லர் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பியுள்ளது. முந்தைய பாகத்தில் ஒரு முக்கிய கீயை தேடி டாம் குரூஸ் பயணித்தார். இந்த பாகத்தின் கதைக்களமும் அதே தேடலிலேயே அமைந்துள்ளது.
அதோடு, மிஷன்: இம்பாஸிபிள் 8ஆம் பாகத்திற்கான சில ஆக்ஷன் காட்சிகளில் டாம் குரூஸுக்கு டூப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 62 வயதான டாம் குரூஸ், தனது நீண்ட சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக சண்டைக்காட்சிகளுக்காக டூப் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.