‘சாட்டை,’ ‘அப்பா,’ ‘வினோதய சித்தம்’ போன்ற திரைப்படங்களில் சமுத்திரகனி மற்றும் தம்பி ராமய்யாவின் கூட்டணி சிறப்பாகப் அமைந்துள்ளது. அந்த வரிசையில் அடுத்ததாக வருகிறது ‘ராஜாகிளி.’ இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ள தம்பி ராமய்யா, தனது மகன் உமாபதி ராமய்யாவை இயக்குனராக அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்தப் படத்தில் எம். எஸ். பாஸ்கர், இளவரசு, ‘ஆடுகளம்’ நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக தம்பி ராமய்யாவே பணியாற்றியுள்ளார். பாடல்களையும் அவரே எழுதி உள்ளார். ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். நடுத்தர வாழ்க்கை வாழும் ஒருவரின் சபல புத்தியால் ஏற்படும் சிக்கல்களை காமெடியாகச் சொல்லும் படமாக இது உருவாகி உள்ளது. படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
தம்பி ராமய்யா தனது மகன் உமாபதியை முதலில் நடிகராக அறிமுகம் செய்ய முயற்சி செய்தார். ‘மகாஜனங்களே,’ ‘மணியார் குடும்பம்,’ ‘திருமணம்,’ ‘தண்ணி வண்டி’ போன்ற படங்களில் உமாபதி நடித்தார். ஆனால், இந்தப் படங்கள் பெரிய வரவேற்பைப் பெறாததால், அவர் மகனை இயக்குனராக மாற்ற முடிவு செய்தார். தம்பி ராமய்யா முதலில் இயக்குனராக இருந்து நடிகராக மாறினார்; தற்போது, அவரது மகன் நடிகராக இருந்து இயக்குனராக மாறியுள்ளார்.சமீபத்தில், உமாபதி, நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது, ஐஸ்வர்யா தனது தந்தை அர்ஜுனின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.