தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே சமயம், அவர் படங்களில் நடிக்கவும் செய்கிறார். சமீபத்தில் அவர் நடித்துள்ள “சிட்டாடல்: ஹனி பன்னி” என்ற வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியது. இந்த தொடரின் படப்பிடிப்பின்போது சமந்தா மயங்கி விழுந்த சம்பவத்தை சக நடிகர் வருண் தவான் பகிர்ந்துள்ளார்.
இதுபற்றி வருண் தவான் கூறியதாவது: “சிட்டாடல் படப்பிடிப்பில் நானும் சமந்தாவும் தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடித்துக் கொண்டிருந்தோம். அப்போது சமந்தா திடீரென மயங்கி விழுந்துவிட்டார். என்ன செய்வது என எனக்கு புரியவில்லை. உடனே ஆக்சிஜன் டேங்க் கொண்டு வந்தனர். அவரது நிலைமையை பார்த்து நான் மிகவும் பயந்துவிட்டேன். படப்பிடிப்பை ரத்து செய்யுமாறு இயக்குநரிடம் கேட்டேன். உடல்நலம் சரியில்லை என்றால் ஓய்வு எடுக்கலாம்; ஆனால் சமந்தா அப்படி செய்யவில்லை. தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
செர்பியாவில் நடந்த படப்பிடிப்பின்போதும் அவர் திடீரென தரையில் மயங்கி விழுந்தார். நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன். ஆனால் இயக்குநர், “அவர் சில நேரத்தில் மீண்டு வருவார்; பயப்படாதீர்கள்,” என்று கூறினார். தனது உடல்நிலைக்கு இடையூறாக இல்லாமல், சக்தியை ஒன்றுசேர்த்து நடித்த சமந்தாவை நான் உண்மையிலே பாராட்ட வேண்டும்,” என்றார் வருண் தவான்.