தமிழில் விஜய் ஆண்டனியின் “கொலை” படத்தின் மூலம் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி, தொடர்ந்து விஜய்யின் “தி கோட்” மற்றும் ஆர்.ஜே. பாலாஜியின் “சிங்கப்பூர் சலூன்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான “லக்கி பாஸ்கர்” படத்திலும் நடித்து, தெலுங்கில் மேலும் பல படங்களில் தோன்றியுள்ளார்.
தற்போது அளித்த பேட்டியில் மீனாட்சி சவுத்ரி கூறியதாவது, “வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். பல நல்ல வாய்ப்புகள் வருகின்றன. சினிமாவுக்கு வந்து சற்று வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல கதைகளிலும், முக்கியமான கதாபாத்திரங்களிலும் மட்டுமே நடிக்க வேண்டும் என்பது என் லட்சியம். ஆனால், இப்படி மட்டுமே நடிக்க வேண்டும் என வரம்புகளை நானே வைத்துக் கொள்வதில்லை.
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது விரும்பத்தக்கது அல்ல. அதுபோல நடிப்பது ரசிகர்களும் விரும்ப மாட்டார்கள். அதனால் நான் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி செல்கிறேன், மேலும் அப்படிப்பட்ட வாய்ப்புகள் என்னை தேடி வர ஆரம்பித்துவிட்டன. சினிமாவில் எனது பயணம் மூன்று ஆண்டுகளை கடந்தது. நடிகையாக வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். எந்த சினிமா பின்னணியுமின்றி வந்து மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்தது பெருமையாக உணர்கிறேன்,” என்றார்.