10 ஆண்டுகளுக்கு முன்பு மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக மிஷ்கின் தற்போது இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வெளியாக இருந்த நிலையில், பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பட வெளியீட்டுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “எங்கள் நிறுவனத்தின்பால் தயாரிக்கப்பட்ட ‘இரண்டாம் குத்து’ படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் (பிசாசு 2 தயாரிப்பாளர்) பாக்கி தொகையை செலுத்தவில்லை. ஐகோர்ட் உத்தரவின் படி மத்தியஸ்தர் தீர்மானித்த ஒரு கோடியே 17 லட்சம் மற்றும் ஜி.எஸ்.டி தொகை 31 லட்சத்தை ராக்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் அதனை இதுவரை வழங்கவில்லை. எனவே, பிசாசு-2 படத்தை வெளியிட தடை வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘பிசாசு-2’ பட வெளியீட்டுக்கு தடை விதித்து, ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணை வருகிற 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.