2019 ஆம் ஆண்டு நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த “லூசிபர்” படம் வெளியானது. மலையாளத்தைத் தாண்டி பல மொழி ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்ட இந்த படம் தெலுங்கில் “காட்ஃபாதர்” எனும் பெயரில் மீண்டும் உருவாக்கப்பட்டது. சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடித்த இந்த படத்தை மோகன்ராஜா இயக்கினார். “லூசிபர்” படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று பிருத்விராஜ் அறிவித்தார். அதன்படி இரண்டாம் பாகத்திற்கு “எம்புரான்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கான கதையை முரளி கோபி எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது, அப்போதே பிருத்விராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில், பிருத்விராஜ் படத்தில் ராணுவ ஜெனரலாக நடிப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது, இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது, இதை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.