நடிகர் துல்கர் சல்மான், மலையாள சினிமாவில் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன். தனது திறமையான நடிப்பால் தனித்துவமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து வெற்றிகரமாக தனது திரையுலக பயணத்தை முன்னெடுத்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் மலையாளத்தைத் தாண்டி தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் வரை தன் செயல்பாட்டைப் பரப்பிய துல்கர் சல்மான், தற்போது அனைத்து மொழிகளிலும் ஆண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இப்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இந்த படம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்காக வெளியாக உள்ளது.இந்த நிலையில், துல்கர் சல்மான், இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேட்டியளிக்கும்போது, “எனக்கு ஒரு படம் தோல்வியடையும்போது அது என்னுடைய பொறுப்பு தான்” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
கடந்த வருடம் துல்கர் சல்மான் நடித்த ‘கிங் ஆப் கொத்த’ படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் அதிர்ச்சி அளித்தது. துல்கர் சல்மான் இந்த படத்தை தனது சொந்த தயாரிப்பில் வெளிவந்திருந்தார். அந்த படத்தின் தோல்விக்கு தானே பொறுப்பு என்று கூறிய துல்கர், அதன் இயக்குனராக அறிமுகமான தனது நண்பர் அபிலாஷ் ஜோஷி திறமையானவராக இருப்பதால், எதிர்காலத்தில் அவர் வெற்றிகரமான இயக்குனராக மாறுவார் என்பதில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.