2000-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஷாலினி அஜித்குமார். 2000ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய “அலைபாயுதே” திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த இவர், அந்தக் கதாபாத்திரம் மூலம் அனைவரின் மனதிலும் நிலைத்து நிறைந்தார்.
அந்தப் படத்தில் அவர்களது கதாபாத்திர பெயர்கள் கார்த்திக் மற்றும் சக்தி பெரும் புகழை பெற்றது. “அலைபாயுதே” திரைப்படத்தை ரசிக்காதவர் யாரும் இருக்க முடியாது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அமைந்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இன்று வரை, “பச்சை நிறமே,” “யாரோ யாரோடி,” “சிநேகிதனே” போன்ற பாடல்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும், அன்றாடம் மக்கள் கேட்கும் பாடல்களின் பட்டியலிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் மிகவும் செயல்பாட்டுடன் இருக்கும் ஷாலினி, அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும், அஜித் குமாருடன் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். நேற்று அவர் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 24 ஆண்டுகள் கடந்த பின், தனது “அலைபாயுதே” ஜோடியான மாதவனுடன் செல்ஃபி எடுத்து, “என்றென்றும் புன்னகை” என்ற தலைப்பில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.