மர்ம தேசம், ருத்ரவீணை, சிதம்பர ரகசியம் போன்ற தொடர்களிலும், அனந்தபுரத்து வீடு படத்தின் மூலம் புகழ்பெற்ற நாகா இயக்கியுள்ள புதிய வெப் தொடர் ‘ஐந்தாம் வேதம்’. இந்த மித்தாலஜி தொடர் அபிராமி மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில், அபிராமி ராமநாதனும், நல்லம்மை ராமநாதனும் தயாரித்துள்ளனர். இதில் சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த வெப்சீரிஸ் ஜீ 5 தளத்தில் வருகிற 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
நான்கு வேதங்கள் இருக்கின்றன, ஆனால் ஐந்தாவது வேதம் ஒன்று இருப்பதாக கூறப்படுகின்றது. அது சிவன் கோவிலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது, மேலும் அது உரிய காலத்தில் வெளிவரும் என ஒரு பழமொழி உண்டு. இதை மையமாகக் கொண்டு பலர் ஐந்தாம் வேதத்தை தேடும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்தாம் வேதம் மற்றும் இன்றைய ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் விதமாக தொடர்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெப் தொடரின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சாய் தன்ஷிகா கூறியதாவது: “எனக்கு மிகவும் மகிழ்ச்சி! எங்கு சென்றாலும் என்னை கேட்ட கேள்வி, ‘நீங்கள் தமிழ் மறந்துவிட்டீர்களா? தமிழில் படமென்றும் எதுவும் எடுக்கவில்லையா?’ என்பதுதான். அப்போதெல்லாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் மனசுக்குள் ஒரே எண்ணம், நான் செய்யும் படங்கள் எனக்கு திருப்தி அளிக்க வேண்டும் என்பதுதான். இந்த எதிர்பார்ப்பின் காரணமாகவே நான் சிறந்த குழுவுடன் இணைந்திருக்கிறேன். நாலு வேதங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் ஐந்தாம் வேதம் இருந்தால் அதில் என்னவெல்லாம் இருக்கும் என்பதே இந்த தொடரின் கதை.
எந்த காலகட்டத்திலும் நமக்கு ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறார், எனக்கு பல இயக்குனர்கள் அந்த வகையில் உதவியுள்ளனர். அதேபோல நாகா சார் எனக்கு மிகவும் வழிகாட்டியாக இருந்து வருகிறார். இந்த தொடரில் புராண கதையும், அதேசமயம் நவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தையும் இணைத்து சொல்லப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் பிடிக்கும் என்பதில் எனக்கு உறுதி. இந்த தொடர் எங்கள் நீண்ட கால உழைப்பின் விளைவு, நிச்சயமாக அதுவே பேசப்படும்.” என்று அவர் கூறினார்.