கன்னி மாடம் என்ற படத்தை இயக்கிய நடிகர் போஸ் வெங்கட் அடுத்து இயக்கியிருக்கும் படம் இது. எடுத்துக் கொண்ட கதை சிறப்பானதுதான், அதை அழுத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் திரைக்கதை அமைப்பதிருக்கிறார்.
1980களில் நடக்கும் கதை. மாங்கொல்லை என்ற கிராமத்தில் தன் அப்பாவால் ஆரம்பிக்கப்பட்ட தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக மாற்றியவர் ஆசிரியர் சரவணன். அவர் ஓய்வு பெற்ற பின் அதே பள்ளிக்குத் தன் மகன் விமலை பணி மாற்றம் செய்து வரவழைத்து பணியாற்ற வைக்கிறார். தனது மகன் அந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் என்பதற்காக அதைச் செய்கிறார். ஆனால், ஊரில் உள்ள அந்தப் பள்ளியை மேல்சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள் இடிக்க வேண்டும் என பல வருடங்களாக முயற்சிக்கிறார்கள். கிராமத்து சாமி செல்லும் பாதை அது எனக் காரணம் சொல்கிறார்கள். அந்தப் பள்ளியை விமல் காப்பாற்றினாரா, மேல்நிலைப் பள்ளியாக மாற்றினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
80களின் இளைஞன் கதாபாத்திரத் தோற்றத்தில் பொருத்தமாகவே இருக்கிறார் விமல். ஆனால், ஆரம்பக் காட்சிகளில் தெரியும் அந்த ‘அலட்டல்’ நடிப்பு அவருக்கு சுத்தமாக செட் ஆகவில்லை. நாடகத்தனமாக இருக்கிறது. போகப் போகத்தான் அந்தக் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.
அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் சாயா தேவியைப் பார்த்ததும் காதல் கொள்கிறார் விமல். வழக்கமான டெம்ப்ளேட் காதலாகவே உள்ளது. காதலை வேண்டாமென்று சாயா தேவி சொல்வதற்கான காரணம் சிறப்பு. ஆனாலும், அடுத்த சில காட்சிகளிலேயே காதலிக்கிறேன் என சொல்லிவிடுகிறார். கிராமத்து ஆசிரியை கதாபாத்திரத்தில் பொருத்தமாக தோற்றத்தில் இருக்கிறார்.
வில்லனாக, கொஞ்சம் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் பார்த்த சரவணனுக்கு இந்தப் படத்தில் சிறப்பான ஒரு கதாபாத்திரம். ஊரில் உள்ள அனைவரும் படிக்க வேண்டும், அப்பா ஆரம்பித்த பள்ளியை மேலும் வளர்க்க வேண்டும் எனத் துடிக்கும் ஆசிரியர் கதாபாத்திரம். படத்தில் தனது கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்துள்ளார். இவரது மனைவியாக ரமாவும் வழக்கம் போலவே இயல்பாக நடித்துள்ளார்.படத்தின் முக்கிய வில்லனாக படத்தின் தயாரிப்பளார் சிராஜ் நடித்திருக்கிறார். விமலுடன் சிறு வயதிலிருந்தே நண்பனாக இருக்கும் மேல் சாதியைச் சேர்ந்தவர். நான்கு பேரை கூட்டு சேர்த்துக் கொண்டு கிராமத்தில் வலம் வரும் ஒரு திமிர் பிடித்த இளைஞர் கதாபாத்திரம். யதார்த்தமாக நடித்துள்ள இவருக்கு இன்னும் சில கூடுதல் காட்சிகளை கொடுத்திருக்கிலாம்.மொத்தத்தில் சார் சமூகநீதி சொல்லும் நல்ல படைப்பே.