சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையன்’ படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் தமிழ் சினிமாவுக்கு புதிதான மற்றும் பெரிதாக பிரபலமில்லாத சில நட்சத்திரங்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, ஆரம்ப காட்சியிலேயே தாதாவாக வந்து, போலீஸ் அதிகாரியான ரஜினியின் என்கவுன்டருக்கு பலியாகும் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள வில்லன் நடிகர் சாபுமோன் அப்துசமது ஆவார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாள ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வென்றவர் அவர்.

இந்நிலையில், ‘வேட்டையன்’ படத்தில் மட்டுமல்லாமல், சமீபத்தில் கேரளாவில் போதைப் பொருள் கடத்தல் தாதா ஓம் பிரகாஷ் என்பவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு சர்ச்சையில் சிக்கிய ‘பிசாசு’ பட நடிகை பிரயாகா மார்ட்டினுக்கு சட்ட உதவி செய்து அந்த சிக்கலிலிருந்து அவர் வெளியே வர உதவியதற்காகவும், சாபுமோன் பரபரப்பான செய்திகளில் அடிபட்டுள்ளார்.

மேலும், சாபுமோன் இயக்குனராக முதன்முறையாக அறிமுகமாகியுள்ளார். அவரது முதல் படத்தில் கதாநாயகியாக அவரது நெருங்கிய குடும்ப நண்பர் மற்றும் நடிகையான பிரயாகா மார்ட்டினை நடிக்க வைத்துள்ளார். சட்டம் படித்தவராக, சாபுமோனின் முதல் படமும் நீதிமன்றத்தை மையமாகக் கொண்ட கதை உடையதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்