சர்வதேச இந்திய திரைப்பட விழா (ஐபா) கடந்த மூன்று நாட்களாக அபுதாபியில் நடைபெற்றது. நேற்று இந்த விழா நிறைவுக்கு வந்தது. இவ்விழாவில் சிறந்த தமிழ் படமாக ‘ஜெயிலர்’ தேர்வு செய்யப்பட்டது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் 6 விருதுகளை வென்றது.
சிறந்த நடிகருக்கான விருதை ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த விக்ரம் பெற்றார், மேலும் சிறந்த நடிகைக்கான விருதை இதே படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு வழங்கினர். பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிய மணிரத்னம் சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றார். இப்படத்திற்கான இசையை வழங்கிய ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசை மற்றும் பின்னணி இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றார். மேலும், சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை, இந்த படத்தில் நடித்த ஜெயராம் பெற்றார். இதன் மூலம் பொன்னியின் செல்வன் படம் 6 விருதுகளை வென்றது.
சிறந்த வில்லன் நடிகருக்கான விருது ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்த எஸ்.ஜே. சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஹிந்தி நடிகருக்கான விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது, அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’ படத்திற்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது. சிறந்த படமாக ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்வு செய்யப்பட்டார், ‘மிஸஸ் சாட்டர்ஜி வெசஸ் நார்வே’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது. சிறந்த இயக்குநராக ’12த் பெயில்’ படத்தை இயக்கிய விது வினோத் சோப்ரா தேர்வு செய்யப்பட்டார்.
சமந்தாவிற்கு சிறந்த பெண்மணி விருது இந்திய சினிமாவின் சிறந்த பெண்மணி என்ற சிறப்பு விருது நடிகை சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. அவரது திரைப்பயணத்தையும் நடிப்பையும் பாராட்டும் விதமாக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.