Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

Forgive me sir… Director Era Saravanan’s warm post about the commitment of actor Sasikumar who acted in the movie Nandhan!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நந்தன் படப்பிடிப்பில் சசிகுமார் பட்ட கஷ்டங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். மேலும், அதற்காக தன்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். அப்படத்தின் இயக்குனர் ரா.சரவணன் பகிர்ந்துள்ளார் அதில்,

வேறு யாராக இருந்தாலும், ‘போடா அங்கிட்டு’ எனச் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். ஆனால், சசிகுமார் சார் என் அத்தனை கெடுபிடிகளையும் சகித்து நின்றார். ‘நந்தன்’ படத்துக்காக கெட்டப் தொடங்கி குணாதிசயம் வரை மாறினார். பற்கள் கறை பிடிக்க வெற்றிலைக்குப் பழக்கமானார். “கேரவன் ஏறவேகூடாது” என்பேன். ஷாட் முடிந்தும் கட்டாந்தரையிலேயே உட்கார்ந்து இருப்பார்.

முகத்தில் மிதிக்கிற காட்சி… முடியவே முடியாது என்றார்கள் சசி சாருடன் வந்தவர்கள். பாலாஜி சக்திவேல் சார் கையெடுத்துக் கும்பிட்டார். “என்னால முடியாது சரவணன்… என்னைய விட்ருங்க ப்ளீஸ்” என்றார். “ஊர்க்காரங்க மாதிரி வெறிகொண்டு மிதிச்சா ஒரே ஷாட்ல ஓகே ஆகிடும். நீங்க தயங்கினா ஷாட் போயிட்டே இருக்கும்” என்றேன். என்னருகே நின்றபடி அதைக் கேட்டுக் கொண்டிருப்பார் சசி சார். சண்டைப் பயிற்சியாளர் ஜான் மார்க் டம்மி கட்டைகளை எடுத்துவர, அவற்றைத் தூரப் போட்டுவிட்டு பழுப்பேறிய தென்னை மட்டைகளைக் கொடுத்தேன். அந்த ஸ்பாட்டை விட்டே சண்டை பயிற்சியாளர் போய் விட்டார்.

ஊர்க்காரர்கள் முன்னால் கத்தினேன். “யாரும் சசி சார்னு இரக்கப்படுறதோ லேசுபாசா நடந்துக்கிறதோ கூடாது. ஊர்ச்சண்டை நடந்தா எப்படி அடிப்பீங்களோ அப்படி அடிக்கனும்; தென்னை மட்டை அவர் முதுகுல போர்ஸா விழனும். தரதரன்னு சசி சாரை இழுத்துட்டுப் போகனும். உதைச்சு பாத்ரூம்ல தள்ளனும்” என காட்சிகளை விளக்கினேன். ஊர்க்காரர்களே ஒரு மாதிரி ஆகிவிட்டார்கள். “எல்லாம் சரி சார்… ஆனா அந்த பாத்ரூம் உள்ளே தள்ள வேணாம்… அது பதினஞ்சு குடும்பங்க பொழங்குற கக்கூசு…” என்றார்கள். “பரவாயில்ல… அதுலயே என்னைய புடுச்சு தள்ளுங்க… என்னைய பத்திரமா பார்த்துக்குறேன்னு பத்து டேக் எடுக்க வைச்சிராதீங்க” என்றார் சசி சார்

க்ளைமாக்ஸ் காட்சிகள் படமான போது சசிகுமார் சாரிடம் பேசுவதையே நான் தவிர்த்தேன். என் உதவியாளர்கள் மூலமாகவே சேதி சொல்வேன். க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை எடுத்து முடிக்கும் வரை நான் மிருகம். வேடிக்கை பார்த்தவர்கள்கூட என்னைத் திட்டித் தீர்த்தார்கள். சசிகுமார் சார் எதுவுமே சொல்லவில்லை. மூங்கில் கம்பு தோள் பட்டையைக் கிழித்து கொட்டியது ரத்தம். தென்னை மட்டை நடு முதுகில் விழுந்ததில் முதுகு முழுக்கக் காயமாகி, சசி சாருக்கு ஜுரம் வந்தது.

ஐந்து நாட்களுக்குப் பிறகு சசிகுமார் சாரை போய்ப் பார்த்தேன். “எடுத்த வரைக்கும் திருப்தியா வந்திருக்கா?” என்றார். “தரையில் இழுபடுகிற ஷாட் ரீ ஷூட் பண்ணனும்… பாலாஜி சார் மிதிக்கிற காட்சி செயற்கையா இருக்கு. அவர்கிட்ட நீங்களே பேசுனீங்கன்னா மிதி ஒழுங்கா வர வாய்ப்பிருக்கு” என்றேன். அடுத்த நாள் அந்தக் காட்சிகள் படமாகின.

படத்தில் வருகிற வன்முறைக் காட்சிகளைக்கூட நான் விரும்புகிறவன் இல்லை. பிறகு ஏன் இவ்வளவு கொடூரம் எனக் கேட்கலாம். பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் பலருடைய துயரக் கதைகள் இதை மிஞ்சுபவை; இன்றளவும் நடப்பவை. ‘காவல் துறை என்று ஒன்று இருக்கிறதா’ எனக் கேட்கிற அளவுக்கு ரிசர்வ் பஞ்சாயத்து தலைவர்கள் மீது நடத்தப்படுகிற கொடுமைகள் எக்கச்சக்கம். இந்த நிஜங்களின் பதிவாக உருவாகும் ‘நந்தன்’ படத்தில் சசிகுமார் சாருக்காக எதையும் குறைக்க நான் விரும்பவில்லை. ஓர் இயக்குநராக நான் எதை வேண்டுமானாலும் விரும்பலாம்; நிறைவேற்றலாம். ஆனால், கதாநாயகனாக சசிகுமார் இவற்றுக்கெல்லாம் கட்டுப்பட்டு நின்றிருக்கத் தேவையில்லை. படத்தையே நிறுத்திவிட்டுக் கிளம்பி இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் அவர் ஏற்று நின்றார்.

‘நந்தன்’ நினைத்ததை நிகழ்த்தியிருக்கும் சூழலில், சசிகுமார் சாரை சந்தித்தேன். அவர் நடிப்பு குறித்து பலரும் பாராட்டிய வார்த்தைகளைச் சிலிர்ப்போடு சொன்னார். “உன்னை நம்பி இனி எந்தக் கதாபாத்திரத்தையும் கொடுக்கலாம். அப்பேர்ப்பட்ட நடிப்புடா இந்தப் படத்துல…” என அண்ணன் சீமான் பாராட்டியதைச் சொன்னார்.

“என் படம் வரும் போதெல்லாம் நல்லா பண்ணியிருக்கேன்னு பல பேர் சொல்வாங்க. ஆனா, ‘நந்தன்’ பார்த்திட்டு நல்லா நடிச்சிருக்கேன்னு சொல்றாங்க. ஒரு நடிகனுக்கு இதுதாங்க தேவைப்படுது” என என் கைகளைப் பற்றிக் கொண்டார் சசிகுமார் சார். அமைதியாக நின்றேன். நான் என்ன சொல்லப் போகிறேன் என்கிற வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார்.

“என்னை மன்னிச்சிடுங்க சார்…” @SasikumarDir

#HBDSasikumar
#nandhan  #நந்தன் என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News