2025ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுப் போட்டியில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் கலந்து கொள்ள ஹிந்தி திரைப்படமான ‘லாபட்டா லேடீஸ்’ படம் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. ‘கொட்டுக்காளி’, ‘மகாராஜா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘தங்கலான்’, ‘ஜமா’, ‘வாழை’ போன்ற தமிழ்ப் படங்களும், ‘ஆட்டம்’, ‘உள்ளொழுக்கு’, ‘ஆடு ஜீவிதம்’, ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ போன்ற மலையாள படங்களும், ‘ஹனுமான்’, ‘கல்கி 2898 எடி’, ‘மங்களவாரம்’ போன்ற தெலுங்கு படங்களும் சேர்ந்து மொத்தம் 29 படங்கள் ஆஸ்கர் தேர்வுக்காக விண்ணப்பிக்கப்பட்டன.

இந்த போட்டியில் 12 ஹிந்தி படங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், 2 மராத்தி படங்கள், ஒரு ஒரியப் படம் ஆகியவை கூட போட்டியில் பங்கேற்றன. இவற்றில் இருந்து, ஹிந்தி படமான ‘லாபட்டா லேடீஸ்’ படத்தை இந்தியா சார்பாகத் தேர்வு செய்து பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா அனுப்புகிறது.

வழக்கமாகவே, இந்தத் தேர்வு பற்றிய ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. தமிழில் ‘வெயில்’, ‘அங்காடித் தெரு’, ‘அரவான்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த பாலன், “’லாபட்டா லேடீஸ்’ என்பது பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்யத்திற்காக உருவாக்கப்பட்ட பீல் குட் டிராமா திரைப்படம். ஆனால் அதற்கு பதிலாக ‘கொட்டுக்காளி’, ‘உள்ளொழுக்கு’, ‘ஆடு ஜீவிதம்’ போன்ற படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்” என பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.