Saturday, September 21, 2024

வாழு வாழவிடு… தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்க விடுங்கள் – ஜெயம்ரவி ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார், மேலும் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குப் பதிவிட்டுள்ளார். இதற்கிடையில் பாப் பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவி தொடர்புடையவர் என்று செய்திகள் பரவத் தொடங்கின. தற்போது ராஜேஷ் இயக்கத்தில் “பிரதர்” என்ற படத்தில் நடித்துள்ளார், இது அக். 31, தீபாவளி அன்று வெளியிடப்படும். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஜெயம் ரவி, செய்தியாளர்களிடம், “பிரதர் படத்தில் வக்கீலாக நடித்துள்ளேன். இது உறவுகளைப் பற்றி பேசும் படம், குறிப்பாக அக்கா-தம்பி இடையேயான பாசத்தைச் சொல்லும் படம். ‘மக்காமிஸி’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பாடலுக்காக என் கால் உடைந்து விடும் அளவிற்கு ஆட வைத்தார். படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.

அதன் பின்னர், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி திறந்த மனத்துடன் பேசினார். அவர் கூறுகையில், “விவாகரத்து குறித்து வருத்தம் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் குடும்பத்தில் சில பிரச்னைகள் வந்தன. சில தனிப்பட்ட காரணங்களால் அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. என் பசங்களுக்கு நல்லது என்ற நோக்கில் நான் இப்போது எந்தப் பேச்சிலும் ஈடுபட விரும்பவில்லை. ஒன்றரை மாதங்களுக்கு முன்பே பிரிவதற்கு முடிவு செய்து, மனைவி ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தேன். அவருடைய அப்பாவும் வந்து பேசினார். இருந்தபோதிலும் விவாகரத்து பற்றி அவருக்கு தெரியவில்லை என அவர் கூறியது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

விவாகரத்து விஷயம் வருத்தம் அளித்தாலும், அது என் சினிமா வாழ்க்கையை பாதிக்காது. அப்பா, அம்மா இருவரும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் ஆசை. அவர்கள் என் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனர். என் மகன்கள் என்னுடன் இருக்கிறார்கள். என் மூத்த மகனிடம் நாங்கள் பிரிவதைப் பற்றிக் கூறி அவரை புரிந்துகொள்ள வைத்திருக்கிறேன். அவர் ஒரு அளவிற்கு அதை உணர்ந்துள்ளார். உண்மை ஒருநாள் நீதிமன்றம் மூலம் வெளிவரும். இந்த வீடு, கார் எல்லாம் நான் உழைத்து சம்பாதித்தவை. சோறு போடும் ரசிகர்களுக்கு நான் எப்போதும் உண்மையாக இருப்பேன்” என்றார்.

பாடகி கெனிஷாவைப் பற்றி அவர் பேசுகையில், “அந்த பெண் பெங்களூருவைச் சேர்ந்தவர். அவருக்கு அப்பா, அம்மா இல்லை. ரொம்ப நல்ல பெண். நடிகர் ஜீவா ஒரு ஆல்பம் வெளியிட்டார். அந்த ஆல்பம் விழாவில் தான் அவர் எனக்கு அறிமுகமானார். பாடகி மட்டுமல்ல, அவர் ஒரு உளவியல் நிபுணர். உளவியல் ரீதியாக அவர் பலரையும் குணப்படுத்தியிருக்கிறார். நாங்கள் இருவரும் சேர்ந்து இலவசமாக சேவை செய்ய ஒரு ஸ்பிரிச்சுவல் சென்டர் தொடங்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். அந்த பெண்ணை பற்றி அவதூறாக பேசாதீர்கள்” என்றார்.

மேலும், “நான் வீட்டை விட்டு சென்றது உண்மைதான். எனது காரை எடுத்துக்கொண்டு, பணம் கூட எடுக்காமல்தான் சென்றேன். ஏற்கனவே இன்னொரு பெண்ணுடன் இணைத்துப் பேசி இருந்தனர், அவருக்கு நிச்சயமாகி விட்டது. எனக்கு மீது சிலர் சேற்றை வாரி வீச முயலுகிறார்கள், ஆனால் அது எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனக்கு இந்த இடத்தை வழங்கிய மக்களுக்கு என்னைப் பற்றிய உண்மைகள் தெரியும்” என்றார். மேலும், “வாழுங்கள், மற்றவர்களை வாழவிடுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்க விடுங்கள். யாரையும் இதற்குள் இழுக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News