கனா, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும், நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் லப்பர் பந்து. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இருவரும் இதுவரை பார்த்திராத தோற்றத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் 20ம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது. படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஹரிஷ் கல்யாண் கூறியதாவது: “கதையை கேட்டதும் இந்த படத்தில் முதல் ஆளாக நுழைந்த நபர் நான் தான். காரணம், பெரும்பாலும் சிட்டி இளைஞனாகவே நடித்து வந்த எனக்கு கிராமத்து கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஒரு பக்கம், விளையாட்டு சம்பந்தமான படத்தில் நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் ஒரு பக்கம் இருந்தது. அந்த இரண்டுமே இந்த ஒரே படத்தில் எனக்கு கிடைத்தது, நானே எதிர்பாராத பரிசாக அமைந்துவிட்டது.
கதை நடக்கும் அந்த கிராமம், அதில் உள்ள மக்கள், இப்படி தெருவுக்கு கிரிக்கெட் பைத்தியமாகத் திரியும் ஒரு பையன் என என்னுடைய கதாபாத்திர உருவாக்கமும் இயக்குநர் பச்சமுத்து இந்தக் கதையை சொன்ன விதமும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. என் திறமையை மதித்து, என்னை யார் விளையாடக் கூப்பிட்டாலும் அவர்களுக்காக சென்று விளையாடும் ஆக்ரோஷ இளைஞன் கதாபாத்திரம் எனக்கு. அதேபோல், எதிரியாக இருந்தாலும் திறமையை மதிக்கும் கதாபாத்திரம் தினேஷுக்குமே. கிரிக்கெட் இந்த படத்தில் முக்கிய இடம் பிடித்திருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் விதம் இதற்கு முந்தைய கிரிக்கெட் படங்களில் இருந்து இதை வித்தியாசப்படுத்திக் காட்டும்.
சிறு வயதில் இருந்தே நான் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் உள்ளவன் என்றாலும் பேட்டிங், விக்கெட் கீப்பிங் தான் என் ஏரியா. பவுலிங்கில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. ஆனால் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஒரு பவுலிங் ஆல் ரவுண்டர் என்பதால் அதற்காக சில பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன். இது விளையாட்டுடன் கூடிய ஒரு குடும்ப பொழுதுபோக்கு படம் தான். கிரிக்கெட் பிரியர்களுக்கு மட்டுமல்ல, பொழுபோக்கு படங்களை விரும்பும் ரசிகர்களுக்கும் லப்பர் பந்து செமத்தியான விருந்தாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.