2024ம் ஆண்டின் எட்டாவது மாதம் இன்னும் 10 நாட்களில் முடிவடைய உள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 23, அடுத்த வார வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 30 ஆகிய நாட்களில் சில சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன. அதிலும், குறிப்பாக, ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக உள்ள சிறிய பட்ஜெட் படங்களில், வாழ்வியல் பற்றிய உணர்ச்சிகரமான படங்கள் முக்கியமாக இடம் பெறுகின்றன.

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட, விஎஸ் வினோத்ராஜ் இயக்கிய “கொட்டுக்காளி”, மாரி செல்வராஜ் இயக்கிய “வாழை”, மைக்கேல் கே ராஜா இயக்கிய “போகுமிடம் வெகு தூரமில்லை”, ஸ்ரீவெற்றி இயக்கிய “நாற்கரப்போர்” ஆகிய படங்கள், யதார்த்தமான வாழ்வியலை உணர்வுபூர்வமாகச் சொல்லும் படங்களாக இருக்கின்றன என அவற்றின் டிரைலர்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் இப்படியான பல படங்கள் வெளியாகி இருப்பது ஆச்சரியமானது.

இப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்கப்படும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதா என்பது, அவை வெளியான பின்னரே தெரியும். அப்படங்களோடு “அதர்மக் கதைகள்”, “சாலா”, “கடமை” ஆகிய படங்களுடன் சேர்த்து மொத்தம் 7 படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளன.