தமிழில் டிமான்டி காலனி என்கிற வித்தியாசமான ஹாரர் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. அதனைத் தொடர்ந்து இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா என இரண்டு படங்களை இவர் இயக்கினார். இவற்றில் இமைக்கா நொடிகள் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. ஆனால் கோப்ரா படம் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் தற்போது டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கொடுத்த பேட்டியில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் தோல்வியடைந்தது எதனால் என மனம் திறந்து உள்ளார் அஜய் ஞானமுத்து.
இது பற்றி அவர் கூறும்போது, ‘கோப்ரா படத்திற்காக தயாரிப்பாளரிடம் என்னிடம் இருந்த கதையை கூறினேன். ஆனால் அந்த கதையில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது இருந்தது. அந்த கதையில் காட்சிகளில், திரைக்கதையில் பல மாற்றங்களை செய்துக்கொண்டு வந்து அரை மனதுடன் தான் உருவாக்கினோம். ஆனாலும் மையக்கதை என்பது பலவீனமாக இருந்ததால் அந்த படத்தை காப்பாற்ற முடியவில்லை.முதலில் கதையையும் பட்ஜெட்டையும் லாக் செய்துவிட்டு தான் படத்தை இயக்க வேண்டும் என்று கோப்ரா பட சறுக்கலில் இருந்து கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார்.