சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் கே.பாலசந்தர். 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இயக்குநர் சிகரம் என்று ரசிகர்களாலும், திரைத்துறையினராலும் அழைக்கப்படுபவர். இயக்குநராக மட்டுமின்றி உத்தம வில்லன், ரெட்டைச்சுழி உள்ளிட்ட படங்களில் நடிகராகவும், தனது திறமையை நிரூபித்தார். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 94ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


இயக்குனர் கே.பாலசந்தர் தான், இந்திய சினிமாவின் இரு துருவங்களாக விளங்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை சினிமாவில் நடிகர்களாக அறிமுகப்படுத்தினார். அதேபோல் ஏராளமான நடிகர்களையும் அறிமுகப்படுத்தியவர் 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர். அவரது படங்களை இப்போது பார்த்தாலும் பல பாடங்களை சொல்லிக்கொடுக்கும் வல்லமை வாய்ந்தவை.


நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், பாலசந்தர் பற்றி 9ஆம் தேதி (பிறந்தநாள்) மட்டும்தான் பேச வேண்டும் என்று நான் நினைப்பதில்லை. ஏனெனில் நான் அவரைப் பற்றி பேசாத நாளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஏராளமான பேரை அறிமுகப்படுத்தியுள்ளார். அதனால் தனக்கு எந்த பயனும் இல்லை, தன்னுடைய தொழிலுக்குத்தான் பயன் என்பதைக் கண்டு செய்தார்.
அவர் வெளியிலும் மிகப்பெரிய குடும்பத்தை அவர் சம்பாதித்துவிட்டுத் தான் சென்றிருக்கிறார். சென்றிருக்கிறார் என்பதைவிடவும் அவர் எங்களோடு இன்னமும் இருக்கிறார் என்பதுதான் உண்மை. இன்று அவரது பிறந்தநாள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது.