2010 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘வம்சம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. அதன் பிறகு, வசந்த குமார் இயக்கத்தில் வெளியான மௌனகுரு திரைப்படத்தில் அருள்நிதியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதியின் நடிப்பில் ஹாரர் படமான டிமான்டி காலனி, ஆறாது சினம், பிருந்தாவனம், தகராறு, இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதி நடித்திருந்தார்.

இந்நிலையில், அருள்நிதி ஒரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தையும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. புதிய படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதிய பிரச்னைகளைப் பற்றி ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தில் பிரபு ஜெயராம் பேசியிருந்தார் அதுபோல் இந்த படம் சமூகம் கருத்துக்களை சொல்லும் படமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.