நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் 2 படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இந்தியன் 2 திரைப்படம் இந்தியில் இந்துஸ்தான் 2 என வெளியிடப்படுகிறது. இதையொட்டி மும்பையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் இந்தியன் 2 படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது, ஹே ராம் படத்தில் ஷாருக்கான் நடித்த போது அவர் ஒரு பைசா கூட வாங்காமல் நடித்ததை நினைவுகூர்ந்த கமல்ஹாசன், நன்றிகளை தெரிவித்தார். “ஹே ராம்” திரைப்படம் கமல் எழுதி, இயக்கி, தயாரித்து 2000ம் ஆண்டில் தமிழ், இந்தி என இருமொழி படமாக வெளியானது. இதில் கமல்ஹாசனும் ஷாருக்கானும் நண்பர்களான சாகேத் ராம் மற்றும் அம்ஜத் அலி கானாக நடித்தனர்.

டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் மேலும் கூறியதாவது: ஹே ராம் படத்தில் ஷாருக்கான் நடித்த போது அவர் ஒரு பைசா கூட வாங்காமல் நடித்தார். நாங்கள் ஒன்றாக வேலை செய்யும் போது, நாம் அனைவரும் வெறும் மனிதர்கள். நான் ஒரு சூப்பர் ஸ்டாரைப் பார்க்கவில்லை. அவர் ஒரு சூப்பர் இயக்குநரைப் பார்க்கவில்லை. நாங்கள் நண்பர்கள், ஷாருக் சாஹிப் அந்தப் படத்தை இலவசமாகத் தயாரித்தார். அதை எந்த சூப்பர் ஸ்டாராலும் செய்ய முடியாது. அது ஒரு ரசிகரால் மட்டுமே முடியும். கலையின் ஆர்வலர் மற்றும் நல்ல நடிகர். அவருக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.