தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உயர்ந்த சூர்யா தனது தொடர்ச்சியான வெற்றிகளால் முன்னணி நடிகராக மாறினார். நந்தா, பிதாமகன், பேரழகன், கஜினி, வாரணம் ஆயிரம், அயன் போன்ற பல படங்களில் தன் நடிப்பு திறனை வெளிப்படுத்தி அசத்தியவர். அதேபோல், சுதா கொங்கரா இயக்கிய சூரரை போற்று படமும் ஹிட்டாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது, சூர்யா சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படத்தில் நடித்துள்ளார், இது மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக வெளிவர இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் சிங்கம் புலி சமீபத்திய பேட்டியில் சூர்யாவுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.சசி ஷங்கர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு சிங்கம் புலியின் வசனத்தில் வெளியான படமான பேரழகனில், ஏ.வி.எம் தயாரிப்பில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்தில் சிங்கம் புலி எழுதிய வசனங்கள் சூர்யாவை மிகவும் ஈர்த்தன. எனவே சூர்யா, சிங்கம் புலியை அழைத்து, “நாம் ஒரு படம் பண்ணலாம். பாலா சார் ஒரு படத்தை தயாரிக்கப்போறாரு. அவர் தயாரிக்கும் முதல் படத்தில் நான் தான் ஹீரோ. அந்த படத்தை நீங்கள் இயக்கனும், கதையை தயாராக்குங்க,” என்று வாய்ப்பு கொடுத்தார்.

இதைப்பற்றி பேசிய சிங்கம் புலி, “சூர்யா தானாக வந்து எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் என் கல்யாணத்தில் கூடவே இருந்து, எனக்கு உடைகள் வாங்கி கொடுத்தார். என் மேல் அவர் கொண்ட அன்பு அளவிட முடியாதது,” என கண்கலங்கிப் பேசினார். இதன்காரணமாக, சிங்கம் புலி மாயாவி கதையை தயார் செய்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இன்றும் ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பதற்குரிய படமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
