விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா, அதன் பின்னர் ‘குக் வித் கோமாளி’ உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும், சில திரைப்படங்களில் நடிக்கும் பாலா, தனது குறைந்த வருமானத்தில் கூட மற்றவர்களுக்கு உதவுவதை தன் கடமையாகக் கொண்டுள்ளார். உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாத பாலா ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கேபிஒய் பாலா பங்கேற்றார். அங்கு, பல நடிகர்களின் குரலில் பேசியும், நடனமாடியும் மாணவர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலா, “என்னால் முடிந்ததை சம்பாதித்து, பிறருக்கு உதவி செய்கிறேன்” என்றார்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் உரையாற்றிய பாலா, “என்னால முடிந்ததை சம்பாதித்து பிறருக்கு உதவுகிறேன்.ஆனால், பலர் என் பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். உண்மையில், என் பின்னால் இருக்கும் அனைத்தும் கஷ்டங்கள், வலி மற்றும் வேதனைகள் தான். அதைக் கடந்து என் அருகில் இருப்பவர் லாரன்ஸ் அண்ணா. அவருக்கு என் மனமார்ந்த நன்றி,” என்று தெரிவித்தார்.
சமீபத்தில் ஒரு வீடியோவில் என்னை யாரோ கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுகிறார் என்று கூறினார்கள். ஆனால், நான் அப்படி எதையும் செய்யவில்லை. வெயிலில் நின்று, நான் கருத்த பணத்தைப் பயன்படுத்தி என்னிடம் உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். மூன்று வேளை சாப்பிடுவதற்கே நான் பிரச்சனைகளை சந்தித்தேன். இப்போது நான் சம்பாதிக்கிறேன், எனவே என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என்று அந்த பேட்டியில் விளக்கினார்.