இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் ‘காதல்’ திரைப்படத்திலிருந்து சுமார் 30 படங்களுக்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர் வீரசமர். இவர் ‘வெயில்’, ‘பூ’, ‘முத்துக்கு முத்தாக’, ‘பாண்டி’, ‘கொம்பன்’ போன்ற படங்களில் நடிகராகவும் முகம் காட்டியவர்.அமலாபால் முதலில் அறிமுகமான ‘வீரசேகரன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு.
துவக்கத்தில் பிரபல கலை இயக்குநரான சாபு சிரிலிடம் உதவியாளராகப் பணியாற்றினார் வீரசமர். அப்போது கமலின் ஹேராம் படத்திலும் வீர சமர் உதவி கலை இயக்குநராகப் பணியாற்றினார். அந்த சந்தர்ப்பத்தில் அந்தப் படத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாகப் பணியாற்றியும் சம்பளமாக 150 ரூபாய்தான் பெற்றதாகக் கூறியுள்ளார் வீர சமர்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ஹேராம்’ படத்தில் சாபுசிரில் ஸாரிடம் உதவியாளர்களாகப் பணி புரிந்தோம். அப்போது எங்களுக்குப் படப்பிடிப்பு நாட்களில் சாப்பாடு கிடைக்கும். சம்பளம் எல்லாம் எதிர்பார்க்கவில்லை. அப்படித்தான் ஓராண்டாக உழைத்துக் கொண்டிருந்தோம்.
ஒரு நாள் சாபு சார் எங்களிடம் “உனக்கு சம்பளம் வருகிறதா?” என்று கேட்டார்..! சாப்பாடு போதும் என்கிற மனநிலைதான் அப்போது எங்களுக்கு. “இல்லை” என்றோம். உடனேயே எங்களுக்கு ஐம்பது ரூபாய் சம்பளம் கொடுக்கச் சொன்னார்.
அந்த ஐம்பது ரூபாய் சம்பளம் பெரிய காசாக அப்போது தோன்றியது. அதைக் கொண்டு வந்து நானும், என் அறை நண்பனுமான இயக்குநர் சீனு ராமசாமியும் கொண்டாடினோம். இப்படி ஹேராம் படத்தில் பணி புரிந்த ஓராண்டில் எங்களுக்கு மூன்று நாள்தான் சம்பளம் கிடைத்தது. அத்துடன் அந்தப் படப்பிடிப்பு முடிந்து விட்டது.
ஆக அந்தப் படத்தில் எனக்கு கிடைத்த சம்பளம் 150 ரூபாய். இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் அந்தப் படப்பிடிப்பில் கிடைத்த அனுபவம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்று இப்போது தோன்றுகிறது...” என்று சொல்லியிருக்கிறார் கலை இயக்குநர் வீரசமர்.