திரைப்படத்திலும் கார் பந்தயத்திலும் இரு துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார் நடிகர் அஜித்குமார். அவர் உருவாக்கிய ‘அஜித்குமார் ரேசிங்’ அணி, துபாயில் நடைபெற்ற போட்டியில் இரண்டாம் இடத்தையும், இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்ற போட்டிகளில் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தது. தற்போது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற ‘கிரென்டிக் 24எச் ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் சீரிஸ் 2025’ என்ற சர்வதேச கார் பந்தயத்தில், அஜித்குமார் ரேசிங் அணி மொத்தத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த சிறப்பான சாதனைக்கு, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அஜித்குமார் மற்றும் அவரது அணியினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தனது பதிவில் அவர், “நடிகரும் நண்பருமான அஜித்குமார் சாரின் அணி சர்வதேச கார் பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். இந்த வெற்றியின் மூலம் அஜித்குமார் அணி இந்தியாவையும் தமிழகத்தையும் சர்வதேச அளவில் பெருமைப்படுத்தியுள்ளது. இதற்காக நம் மனமார்ந்த வாழ்த்துகள்,” எனக் கூறியுள்ளார்.
மேலும், அந்த போட்டியில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோ கார், ரேஸிங் உபகரணங்கள் மற்றும் அணியின் ஜெர்சிகளில் இடம்பெற்றிருந்தது குறித்து, “தமிழக அரசின் சார்பில் இதற்காக நன்றி தெரிவிக்கிறோம். அஜித்குமார் ரேசிங் அணி எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பதிவு செய்யட்டும்,” எனத் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.