பூவரசம் பீபீ, ஏலே போன்ற படங்களை ஒரு தனித்துவமான பார்வையில் இயக்கி மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ஹலிதா ஷமீம். இவரின் இயக்கத்தில் வெளிவந்த சில்லு கருப்பட்டி படம் மக்களிடத்தில் பரவலான பாராட்டுகளை பெற்றது.
அடுத்ததாக ஹலிதா ‘மின்மினி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். எஸ்தர் அனில், கௌரவ் காளை மற்றும் பிரவின் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாதியின் படப்பிடிப்பை 2015ஆம் ஆண்டு தொடங்கிய ஹலிதா, நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் வளர வேண்டும் என்பதற்காக 7 ஆண்டுகள் காத்திருந்து அவர்கள் வளர்ந்த பிறகு இரண்டாம் பாதியை படமாக்கியுள்ளார்.இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
படத்தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொண்டுள்ளார். இசையமைப்பை ஏ.ஆர். ரகுமானின் மகளான கதிஜா ரகுமான் செய்துள்ளார். படத்தை முரளி கிருஷ்ணன் உடன் இணைந்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்துள்ளார். படத்தை உலகளவில் டெண்ட் கொட்டா மற்றும் சிம்பா நிறுவனம் வெளியிடவுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.சில மாதங்களுக்கு முன்பு படத்தின் சிறப்பு திரையிடல் நடந்து நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.