Advertisement

“என்னைவிட என்னை யாரும் விமர்சிக்க முடியாது” – திவ்யா ஸ்ரீபடா!

மணிகண்டன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் தெலுங்கு நடிகை திவ்யா ஸ்ரீபடா. சந்தோஷ்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்துள்ள அவர், தனது கதாபாத்திரம் குறித்தும் தமிழ் சினிமாவில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் மனம் திறந்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “தெலுங்கு சினிமாவிலிருந்து தமிழுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. மணிகண்டனின் நடிப்பை ஏற்கெனவே பார்த்து வியந்திருக்கிறேன். இப்போது அவருடன் இணைந்து நடித்திருப்பது சந்தோஷமாக உள்ளது. இப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாகவும், நான் நீதிமன்றத்தில் பணிபுரியும் தட்டச்சராகவும் நடித்திருக்கிறேன். இயல்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

தனது நடிப்புக்குக் கிடைக்கும் விமர்சனங்களை எப்படிக் கையாள்கிறார் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஒவ்வொரு நாளையும் எதிர்பார்ப்புடன் தொடங்குகிறேன். மற்றவர்கள் சொல்லும் விமர்சனங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. என்னைவிட என்னை யாரும் சிறப்பாக விமர்சித்துவிட முடியாது. நன்றாக நடித்திருந்தால் என்னைப் பாராட்டிக்கொள்வேன்; தவறு செய்திருந்தால் நானே என்னைத் திட்டிக்கொள்வேன். என்னை நானே மதிப்பீடு செய்யும் இந்தப் பழக்கம் எனக்குப் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது” என்று கூறினார்.

‘மக்கள் காவலன்’ படப்பிடிப்பிற்காக மதுரையில் தங்கியிருந்தபோது அங்குள்ள உணவு வகைகளைச் சுவைத்த அனுபவத்தையும் திவ்யா பகிர்ந்துகொண்டார். பருத்திப்பால், ஜிகர்தண்டா உள்ளிட்ட மதுரையின் பிரபல உணவுகளை ருசித்ததாகவும், அந்த அனுபவம் என்றும் மறக்க முடியாததாக அமைந்ததாகவும் தெரிவித்தார். தனது முதல் தமிழ்ப் படமான ‘மக்கள் காவலன்’ நல்ல அறிமுகத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் உள்ளார்.

Add a Comment

Leave a Reply