Advertisement

ஆஸ்கர் ரேஸில் இந்தியாவின் இரண்டு படங்கள்!

99-வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை ஆஸ்கர் அகாடமி மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் அதிகாரப்பூர்வத் திரைப்படமாக, ‘சிறந்த சர்வதேசத் திரைப்படம்’ பிரிவுக்கு மராத்தியப் படமான ‘கோந்தல்’ தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்படும் நான்காவது மராத்தியத் திரைப்படம் என்ற அடையாளத்தையும் ‘கோந்தல்’ பெற்றுள்ளது. சந்தோஷ் தவாகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

வழக்கமாக, ஒரு நாட்டின் சார்பில் ‘சிறந்த சர்வதேசத் திரைப்படம்’ பிரிவுக்கு ஒரே ஒரு படத்தைத்தான் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்க முடியும். அந்த நடைமுறையின்படி இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு ‘கோந்தல்’ படத்தைத் தேர்வு செய்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு ஆஸ்கர் அகாடமியின் புதிய விதிமுறை காரணமாக மற்றொரு இந்தியப் படத்திற்கும் இந்தப் பிரிவில் இடம் கிடைத்துள்ளது. உலகின் ஆறு முக்கிய சர்வதேசத் திரைப்பட விழாக்களில் உயரிய விருதைப் பெறும் படங்கள், இந்தப் பிரிவுக்கு நேரடியாகத் தகுதி பெறும் வகையில் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விதியின் அடிப்படையில் தேஜா ரியோ இயக்கிய கொன்யாக் மொழித் திரைப்படமான ‘ஆங்க்’ தேர்வாகியுள்ளது. டொரண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் வழங்கப்படும் உயரிய விருதான பிளாட்பார்ம் விருதை இப்படம் வென்றதால், ஆஸ்கர் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. இவை இறுதிப் பட்டியல் அல்ல. இந்தப் படங்களைப் பார்வையிடும் ஆஸ்கர் நடுவர் குழு, முதலில் 15 திரைப்படங்களைத் தேர்வு செய்யும். பின்னர் அவற்றிலிருந்து ஐந்து படங்கள் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம்பெறும்.

Add a Comment

Leave a Reply