சென்னையிலிருந்து பெங்களூருவுக்குச் செல்லும் ரயிலில் கலையரசன், காளி வெங்கட், ராகவ் விஜய் ஆகிய மூவரும் பயணிக்கின்றனர். அந்தப் பயணத்தின்போது அறிமுகமாகிக்கொள்ளும் அவர்கள், தங்களது கடந்தகால காதல் அனுபவங்களைப் பற்றி பேசத் தொடங்குகின்றனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், அவர்களது காதல் கதைகள் எதிர்பாராத விதமாக ஒரு கட்டத்தில் ஒன்றோடொன்று தொடர்புபடுகின்றன. அந்த மூன்று காதல்களுக்குப் பின்னால் இருக்கும் சம்பவங்கள் என்ன, அவை எப்படிப் பொதுவான புள்ளியில் இணைகின்றன என்பதே படத்தின் மீதிக்கதை.
மூன்று தனித்துவமான காதல் அனுபவங்களைத் தனித்தனியாக விவரித்துவிட்டு, பின்னர் அவற்றை ஒரே கதைக்களத்துக்குள் கொண்டுவரும் இயக்குநர் ஜானகிராமனின் அணுகுமுறை சுவாரசியமாக அமைந்துள்ளது. கலையரசன் தனது வழக்கமான இயல்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். காதல் சம்பவங்களை நகைச்சுவை கலந்த விதத்தில் விவரிக்கும் காட்சிகளில் காளி வெங்கட் தனது பாணியில் ரசிகர்களைச் சிரிக்க வைக்கிறார்.
திருமணத்தின்போது தனது முன்னாள் காதலி நேரில் வந்து நிற்பதைப் பார்த்து என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கும் தருணங்களில் ராகவ் விஜயின் நடிப்பு பாராட்டுகளைப் பெறுகிறது. நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை; சுமார் ரகமாகவே உள்ளன. மூன்று காதல் கதைகளிலும் இடம்பெறும் சுவாரசியமான நிகழ்வுகளை இன்னும் அழுத்தமாகவும் விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்தியிருந்தால் படம் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.
