திரையுலகில் பல நடிகைகள் எதிர்மறை கதாபாத்திரங்களை ஏற்கத் தயங்கும் நிலையில், ரெஜினா கசாண்ட்ரா தொடர்ந்து வில்லி வேடங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக, 30 வயதைக் கடந்த திருமணமாகாத நடிகைகள் வில்லி கதாபாத்திரங்களில் நடித்தால், கதாநாயகியாகத் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடுமோ என்ற எண்ணத்தில் இத்தகைய பாத்திரங்களைத் தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் கணக்குகளுக்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்காமல் ரெஜினா தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் துணிச்சலாக எதிர்மறை கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார்.
தனது கதாபாத்திரத் தேர்வு குறித்து பேசியுள்ள ரெஜினா, “ஒரே மாதிரியான வேடங்களில் தொடர்ந்து நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. நல்ல குணம் கொண்ட கதாபாத்திரம், கதாநாயகி வேடம், சிறப்புத் தோற்றம், வில்லி கதாபாத்திரம் எனப் பல்வேறு விதமான பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஒரு படத்தில் எனக்குக் கிடைக்கும் திரை நேரத்தை விட, அந்தக் கதாபாத்திரம் எத்தகைய ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கிறது என்பதற்கே முன்னுரிமை அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
தனது சினிமா பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதுதான் தற்போதைய முக்கிய நோக்கம் என்றும் ரெஜினா கூறியுள்ளார். தமிழில் ‘விடாமுயற்சி’ படத்தைத் தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘பிளாஷ்பேக்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதேபோல், இந்தியில் ‘தி வேவ்ஸ்’, ‘செக்சன் 108’ ஆகிய படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
