‘யாத்திசை’ திரைப்படத்தின் மூலம் தனக்கென கவனம் பெற்ற இயக்குநர் தரணி ராசேந்திரன், தற்போது ‘டெத் இரயில்வே’ படத்தை இயக்கியுள்ளார். ஜே. கமலகண்ணன் தயாரிக்கும் இப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, பவானி ஸ்ரீ, கிஷோர், சிவதா, சேயோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்ய, சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
1944-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் சூழலே இப்படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. ஜப்பான் ராணுவம் இந்தியாவுக்குள் நுழைய மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, பர்மா மற்றும் தாய்லாந்தை இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. அந்த வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு ‘டெத் இரயில்வே’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ‘டெத் இரயில்வே’ படத்தின் டைட்டில் டீசரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது பதிவில், “குறைந்த பட்ஜெட்டிலும் தெளிவான பார்வையும் முறையான திட்டமிடலும் இருந்தால் சிறப்பான படைப்பை உருவாக்க முடியும் என்பதை ‘யாத்திசை’ குழுவினர் ஏற்கெனவே நிரூபித்துள்ளனர். தற்போது இரண்டாம் உலகப் போர் காலத்தை மையமாகக் கொண்ட கதையுடன் ‘டெத் இரயில்வே’ மூலம் மீண்டும் வந்திருக்கிறார்கள். இந்தப் படம் அவர்களுக்குத் தேவையான அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என நம்புகிறேன்” என்று பாராட்டியுள்ளார்.
