மலர்விழி நடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பவ்யா திரிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பூஜிதா பொன்னடா, ஜெயபிரகாஷ், முனிஷ்காந்த், ஆர்யன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அலர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இணைந்து தயாரித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.
நிஜத்தில் நடந்த சம்பவங்களைத் தழுவி காதல் மற்றும் மர்மம் கலந்த திரில்லராக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் மேற்கொள்ளப்படும் பயணத்தின்போது, 11.30 மணிக்கு ஒரு போக்குவரத்து சிக்னலில் கதாநாயகன் விசித்திரமான சம்பவத்தை எதிர்கொள்கிறார். அந்த நிகழ்வு அவரது வாழ்க்கையையே வேறு பாதைக்கு அழைத்துச் செல்கிறது. அந்தச் சம்பவம் எப்படி நடந்தது, அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன என்பதைக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காதல் காட்சிகளுக்கு நடுவே மர்மமான நிகழ்வுகளும் எதிர்பாராத திருப்பங்களும் இடம்பெற்றுள்ளதால் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், வழக்கமான கதைகளிலிருந்து மாறுபட்ட திரில்லர் அனுபவத்தைத் தரும் எனப் படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
