தனுஷின் 55-வது திரைப்படமாக உருவாகும் ‘ஓம்’ படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் பின்னணியில் உருவாகிறது. இதில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி கதாநாயகிகளாக நடிக்க, மம்முட்டி மற்றும் நஸ்ருதீன் ஷா முக்கியக் கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதும் படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.
அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட இப்படம், பின்னர் நவம்பர் 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, படத்தில் சாய் பல்லவி ஏற்றுள்ள கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் அவர் நித்யா ரெட்டி என்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. ‘அலாக்கா லோவா’ மற்றும் ‘வீழா வீரா’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. அடுத்தடுத்த பாடல்களுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், ‘ஓம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 6-ம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ், சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கவுள்ள இந்த நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
