ரூ.634 கோடி முறைகேடு புகாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… ஷபானா ஷாஜகான் அறிக்கை!

தமிழகத்தில் கடந்தஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார் எழுந்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்குடன் தொடர்புபடுத்தி சின்னத்திரை நடிகை ஷபானா ஷாஜகானின் பெயரும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளக்க அறிக்கை வெளியிட்டுள்ள ஷபானா ஷாஜகான், “இந்த விவகாரத்தில் எனக்குத் தொடர்பு இருப்பதாக எந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது? அதற்கான ஆதாரம் என்ன? எனது பெயரை முதலில் இதில் இணைத்தது யார்? எந்த அடிப்படையில் இத்தகைய தகவல்கள் பரப்பப்படுகின்றன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பல்வேறு சமூக வலைதளப் பக்கங்கள் ஒரே மாதிரியான தலைப்புகளுடன் இத்தகவலைப் பகிர்வதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல் பலரும் தொடர்ந்து பகிர்வது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தன்னை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசமாகச் சித்தரிக்கும் வகையிலும் மீம்ஸ்கள் மற்றும் பதிவுகள் வெளியிடப்படுவதை ஏற்க முடியாது என்றும், இத்தகைய செயல்கள் தனிநபர் மீதான தாக்குதல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவறான தகவல்களை வேகமாகப் பரப்புபவர்கள், அவை பொய்யானவை எனத் தெரியவரும்போது அதே வேகத்தில் திருத்தத்தையும் வெளியிடுவார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்கவும் அதே முயற்சியை மேற்கொள்வார்களா என ஆதங்கம் தெரிவித்துள்ளார். தனது கண்ணியத்தை யாரிடமும் கெஞ்சிப் பெற வேண்டியதில்லை என்றும், தன்னைப் பற்றிய உண்மை தனது குடும்பத்தினருக்கும் தனக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், மக்களைத் தவறாக வழிநடத்தக்கூடியவை என்றும் ஷபானா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தன் மீது அன்பு கொண்டவர்கள் பலரும் கவலையுடன் விசாரித்து வருவதால், அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கிலேயே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply