“இசையை மதிப்பிடுவதற்கு முன்பு அதற்கு கால அவகாசம் கொடுங்கள்” – ஏ.ஆர்.ரஹ்மான் OPEN TALK!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதியும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர்.‌ ஏற்கெனவே ‘ஜெய் ஜெய் ராம்’, ‘ராவண தாண்டவம்’ பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், மூன்றாவது பாடலான ‘மங்கள வண்ணமே’ தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்திய பேட்டியில் இசையைப் பற்றிப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ஒரு படைப்பை உடனடியாக மதிப்பிடாமல் அதைக் கேட்பவர்கள் அதற்குப் போதிய நேரம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நானே எனது முதல் விமர்சகர். நாங்கள் ஒரு படைப்பை ஒரே நாளில் முடிவு செய்வதில்லை. சில நேரங்களில் மாதக்கணக்கில் அதனுடன் பயணிக்கிறோம். சில மெட்டுகள் ஊறுகாயைப் போல காலம் செல்லச் செல்ல மேலும் சிறப்பாகும்.

ஆனால், மக்கள் சில நேரங்களில் ஒரு பகுதியை மட்டுமே பார்த்துவிட்டு முழுப் படைப்பையும் மதிப்பிடுகிறார்கள்.‌படம் வெளியான பிறகுதான் குறிப்பிட்ட இசையை ஏன் பயன்படுத்தினோம் என்பது அவர்களுக்குப் புரியும். பொதுமக்களின் கருத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க முடியும். எல்லோரையும் திருப்திப்படுத்த முயற்சி செய்வதைவிட, நமது இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்” எனக் கூறியுள்ளார். மேலும், ஸ்டீவ் ஜாப்ஸின் கருத்தை மேற்கோள் காட்டிய அவர், “எல்லோரையும் திருப்திப்படுத்த விரும்பினால், போய் ஐஸ்கிரீம் விற்கலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply